விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் - வந்தவாசி சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள மேல்மாவிலங்கை - தாதாபுரம் இணைப்பு சாலையில் இறங்கி 3 கி.மீ தொலைவு கிழக்கே சென்றால் வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜராஜபுரம் ஊரை சென்றடையலாம். "இராஜராஜபுரம்' என்று கேட்டால் பலர் சற்று யோசிப்பார்கள். "தாதாபுரம்' என்று அவ்வூர் இன்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்த இராஜராஜ சோழன், இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தரசோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தான். இராஜராஜன் தனது தமக்கையான குந்தவை பிராட்டியார் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டிருந்தான் என்பதை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.
""ஸ்ரீராஜராஜ தேவர் தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் தேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்'' என்றே கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் தஞ்சை ராஜராஜேச்சரம் கோயிலைக் கட்டிய பொழுது வழிபாட்டிற்காக தானம் அளித்தவர்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது ""நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீசுவரமுடையார்க்கு நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும், நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் கல்லிலே வெட்டுக'' என்று தனது தமக்கைக்கு ராஜராஜன் முன்னுரிமை அளித்து போற்றியிருப்பதைக் கல்வெட்டுகளிலே காண முடிகிறது. "குந்தவை' என்றால் "வணக்கத்துக்குரிய அம்மை' என்பது பொருள் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
குந்தவை பிராட்டியார் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடவல்லார் நம்பிராட்டியார் உமாபரமேசுவரி, தட்சிணமேரு விடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேசுவரி, தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேசுவரி போன்ற செப்புத்திருமேனிகளைச் செய்து அளித்தார் என்பதை அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் பொன்மாளிகை துஞ்சினதேவர் (தந்தை
சுந்தரசோழன்) படிமம், தம் தாய் வானவன் மாதேவியாரின் (தம் அம்மையாக எழுந்தருளுவித்த) படிமம் ஆகியவற்றைச் செய்தளித்தும் வழிபாட்டிற்கும் தானம் அளித்த செய்தி அவர் தனது பெற்றோரிடம் கொண்டிருந்த பாசத்தையும் - நேசத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இராஜராஜ சோழன் பிறந்த "சதய' நாளிலும், அவரது தமக்கை குந்தவையார் பிறந்த " அவிட்டத் திருநாளிலும்' திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது. திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "கோபுரப்பட்டி' என்னும் கிராமத்தில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன் கோயிலில் ""உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு முன் பிறந்தருளின ஆழ்வார் ஸ்ரீ குந்தவை பிராட்டியார் பிறந்தருளின அவிட்டத் திருநாளில்'' - திருவிழாவும் இறைவனுக்கு பெருந்திரு அமுது செய்தருள மக்கள் 180 கலம் நெல் அளித்ததாக இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாகக் கூறுகிறது. அழகிய சோழர்கால சிற்பங்கள் கட்டடக்கலை சிறப்புடன் விளங்கும் இக்கோயிலை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வரலாற்றுச் சின்னமாகப் போற்றி பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோயில் பணிகள் மட்டுமல்லாமல், சமூக தொண்டு உள்ளம் உடையவர் குந்தவை, என்பதையும் அறிய முடிகிறது. தஞ்சாவூரில் தனது தந்தையின் பெயரால் " சுந்தரசோழ விண்ணகர் ஆதுலர் சாலை' என்னும் மருத்துவமனையை நிறுவி அதற்கு வேண்டிய செலவுகளுக்கு நிலங்களை அளித்தார். நாம் செல்லப் போகும் "தாதாபுரம்' அருகிலும், செய்யாறு அருகிலும் "குந்தவை பேரேரி', "சுந்தரசோழப் பேரேரி' என்ற இரு ஏரிகளை வெட்டுவித்து வேளாண்மைக்கும், மக்களுக்கும் பெரும் தொண்டு செய்தவர் மாதரசி குந்தவை
பிராட்டியார்!
இத்தகைய சிறப்பினைப் பெற்ற, குந்தவை பிராட்டியார் எடுப்பித்த அழகிய இரு திருக்கோயில்களைக் காண தாதாபுரம் "இராஜராஜபுரம்' செல்வோம்!
குந்தவை பிராட்டியார் தனது தம்பியின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த ராஜராஜபுரமாகிய இவ்வூரில் 1. ஸ்ரீ ரவிகுல மாணிக்கேசுவரர் திருகோயில், 2. ஸ்ரீகுந்தவை விண்ணகர் ஆழ்வார் திருக்கோயில் (பெருமாள் கோயில்), 3. ஸ்ரீ குந்தவை ஜீனாலயம் என்ற சமண கோயில் என்ற மூன்று கோயில்களை எடுப்பித்ததைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. பிராட்டியாரின் சமயப்பொறைக்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இரவிகுல மாணிக்க ஈசுவரர் திருக்கோயில்: இராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான ரவிகுலமாணிக்கம் என்ற பெயரில் இக்கோயில் அமைந்துள்ளது. மணிகண்டேசுவரர் திருக்கோயில் என மக்கள் அழைக்கின்றனர். இங்கும், பெருமாள் கோயிலிலும் பணியாற்றும் நடனப் பெண்கள் இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது கலந்து கொண்டு நடனமாட வேண்டும் என ஆணையிடப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. குந்தவை பிராட்டியார் இக்கோயிலில் 10 விளக்குகள் எரிக்கவும் தானம்
அளித்துள்ளார்.
குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில்: இதுவும் குந்தவை பிராட்டியாரின் அருட்கொடைதான்! தற்பொழுது கரிவரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுரவாயில் சிதைந்த நிலையில் முடிவடையாமல்
உள்ளது.
இக்கோயிலில் 10 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு குந்தவை பிராட்டியாரால் 900 ஆடுகள் அளிக்கப்பட்டன. அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு கார்த்திகை மாதம் கார்த்திகை விளக்கு எரிக்க அவை மன்றாடிகளின் வசம் அளிக்கப்பட்டது. மேலும் இக்கோயிலுக்கு ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்றோரும் தானம் அளித்துள்ளனர். கருவறையின் தெற்குச் சுவரில் பெண் ஒருவரின் சிற்பம் காணப்படுகிறது. இப்பெண் குந்தவையாராக இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.
சோழப் பேரரசியால் கட்டப்பட்ட இரு கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.